Viewing:

2 நாளா 2-chronicles 13

Select a Chapter

அத்தியாயம் 13

யூதாவின் ராஜாவாகிய அபியா

1ராஜாவாகிய யெரொபெயாமின் பதினெட்டாம் வருடத்தில் அபியா யூதாவின்மேல் ராஜாவாகி, 2மூன்று வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; கிபியா ஊரானாகிய ஊரியேலின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் மிகாயாள்; அபியாவுக்கும் யெரொபெயாமுக்கும் போர் நடந்தது. 3அபியா தெரிந்துகொள்ளப்பட்ட நான்குலட்சம்பேராகிய பலசாலிகளான படைவீரர்களைப் போருக்கு ஆயத்தம்செய்தான்; யெரொபெயாம் தெரிந்துகொள்ளப்பட்ட எட்டுலட்சம்பேராகிய மிகவும் பலம்வாய்ந்த படைவீரர்களை அவனுக்கு எதிராக போருக்கு நிறுத்தினான். 4அப்பொழுது அபியா எப்பிராயீம் மலைத்தேசத்திலுள்ள செமராயிம் என்னும் மலையின்மேல் ஏறி நின்று: யெரொபெயாமே, எல்லா இஸ்ரவேலரே, கேளுங்கள். 5இஸ்ரவேலை என்றைக்கும் ஆளும் அரசாட்சியை இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா தாவீதுக்கும் அவன் மகன்களுக்கும் மாறாத உடன்படிக்கையாகக் கட்டளையிட்டதை நீங்கள் அறியவில்லையா? 6ஆகிலும் தாவீதின் மகனாகிய சாலொமோனின் வேலைக்காரனான யெரொபெயாம் என்னும் நேபாத்தின் மகன் எழும்பி, தன் எஜமானுக்கு விரோதமாகக் கலகம்செய்தான். 7துன்மார்க்க மக்களாகிய வீணர்கள் அவனோடுகூடி, சாலொமோனின் மகனாகிய ரெகொபெயாம் அவர்களை எதிர்க்கமுடியாமல் இளவயதும் உறுதியற்ற மனமுள்ளவனாக இருக்கும்போது, அவனுக்கு விரோதமாகத் தங்களைப் பலப்படுத்திக்கொண்டார்கள். 8இப்போதும் தாவீதுடைய மகன் கையிலிருக்கிற யெகோவாவுடைய ராஜ்ஜியத்திற்கு விரோதமாக நீங்கள் பெலன் கொள்ளலாமென்று நினைக்கிறீர்கள்; நீங்கள் ஏராளமான கூட்டம்; யெரொபெயாம் உங்களுக்கு தெய்வங்களாக உண்டாக்கின பொன் கன்றுக்குட்டிகளும் உங்களிடத்தில் இருக்கிறதே. 9நீங்கள் ஆரோனின் மகன்களாகிய யெகோவாவுடைய ஆசாரியர்களையும், லேவியர்களையும் தள்ளிவிட்டு, தேசாதேசங்களின் மக்களைப்போல உங்களுக்கு ஆசாரியர்களை ஏற்படுத்திக்கொள்ளவில்லையோ? இளங்காளையினாலும், ஏழு கடாக்களினாலும், தன்னைப் பிரதிஷ்டை செய்துகொள்ள வருகிற எவனும் தெய்வம் அல்லாதவைகளுக்கு ஆசாரியனாகிறானே. 10எங்களுக்கோ யெகோவாவே தேவன்; நாங்கள் அவரைவிட்டு விலகவில்லை; யெகோவாவுக்கு ஊழியம்செய்கிற ஆசாரியர்கள் ஆரோனின் மகன்களும், பணிவிடை செய்கிறவர்கள் லேவியருமாமே. 11அவர்கள் தினந்தோறும் யெகோவாவுக்குச் சர்வாங்க தகனபலிகளையும் சுகந்த வாசனையான தூபத்தையும் செலுத்தி, காலையிலும், மாலையிலும், பரிசுத்தமான மேஜையின்மேல் சமுகத்து அப்பங்களை அடுக்கிவைத்து, பொன் குத்துவிளக்கையும் அதின் விளக்குகளை மாலைதோறும் ஏற்றுகிறார்கள்; நாங்கள் எங்கள் தேவனாகிய யெகோவாவின் நியமங்களைக் காக்கிறோம்; நீங்களோ அவரை விட்டு விலகினீர்கள். 12இதோ, தேவன் எங்கள் சேனாபதியாக எங்களோடு இருக்கிறார்; உங்களுக்கு விரோதமாகப் பூரிகைகளைப் பெருந்தொனியாக முழக்குகிற ஆசாரியர்களும் இருக்கிறார்கள்; இஸ்ரவேல் புத்திரரே, உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாக போர்செய்யாதீர்கள்; செய்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்காது என்றான். 13யெரொபெயாம் அவர்களுக்குப் பின்னாக வரத்தக்கதாக ஒரு இரகசியப் படையை சுற்றிப்போகச் செய்தான்; அப்படியே அவர்கள் யூதாவுக்கு முன் இருந்தார்கள்; அந்த இரகசியப் படை அவர்களுக்குப்பின் இருந்தது. 14யூதா மக்கள் திரும்பிப்பார்க்கிறபோது, முன்னும் பின்னும் போர் நடக்கிறதைக் கண்டு, யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்; ஆசாரியர்கள் பூரிகைகளை முழக்கினார்கள். 15யூதா மனிதர்கள் ஆர்ப்பரித்தார்கள்; யூதா மனிதர்கள் ஆர்ப்பரிக்கிறபோது. தேவன் யெரொபெயாமையும் இஸ்ரவேலனைத்தையும் அபியாவுக்கும் யூதாவுக்கும் முன்பாகத் தோற்கடித்தார். 16இஸ்ரவேல் மக்கள் யூதாவுக்கு முன்பாகத் தோற்று ஓடினார்கள்; தேவன் அவர்களை யூதாவின் கையில் ஒப்புக்கொடுத்தார். 17அபியாவும் அவனுடைய மக்களும் அவர்களில் பெரும்பகுதியை அழித்தார்கள்; தெரிந்துகொள்ளப்பட்ட ஐந்துலட்சம்பேர் இஸ்ரவேலில் வெட்டுண்டு விழுந்தார்கள். 18அப்படியே இஸ்ரவேல் மக்கள் அக்காலத்திலே தாழ்த்தப்பட்டார்கள்; யூதா மனிதர்களோ தங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவாவைச் சார்ந்துகொண்டதால் மேற்கொண்டார்கள். 19அபியா யெரொபெயாமைப் பின்தொடர்ந்து, அவனுக்கு உண்டான பட்டணங்களாகிய பெத்தேலையும் அதின் கிராமங்களையும், எஷானாவையும் அதின் கிராமங்களையும், எப்பெரோனையும் அதின் கிராமங்களையும் பிடித்தான். 20பிறகு அபியாவின் நாட்களில் யெரொபெயாம் பலப்படமுடியாமற்போனது. யெகோவா அவனை அடித்ததால் மரணமடைந்தான். 21அபியா பலத்துப்போனான்; அவன் பதினான்கு பெண்களைத் திருமணம்செய்து, இருபத்திரண்டு மகன்களையும் பதினாறு மகள்களையும் பெற்றான். 22அபியாவின் மற்ற செயல்களும், நடத்தைகளும், வார்த்தைகளும், தீர்க்கதரிசியாகிய இத்தோவின் சரித்திரத்தில் எழுதப்பட்டிருக்கிறது.