Viewing:

எசேக் Ezekiel 46

Select a Chapter

அத்தியாயம் 46

அதிபதியும் பண்டிகைகளும்

1யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: வேலைசெய்கிற ஆறுநாட்களிலும் கிழக்குக்கு எதிரான உள்முற்றத்தினுடைய வாசல் பூட்டப்பட்டிருந்து, ஓய்வு நாளிலும் மாதப்பிறப்பிலும் திறக்கப்படவேண்டும். 2அப்பொழுது இளவரசன் வெளிவாசல் மண்டபத்தின் வழியாக நுழைந்து, வாசற்படி அருகில் நிற்கவேண்டும்; ஆசாரியர்களோ அவனுடைய தகனபலியையும், அவனுடைய சமாதான பலிகளையும் படைக்கவேண்டும்; அவன் வாசற்படியிலே ஆராதனை செய்து, பின்பு புறப்படுவானாக; அந்த வாசல் மாலைவரை பூட்டப்படாமல் இருப்பதாக. 3தேசத்து மக்களும் ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் அந்த வாசலின் நடையிலே யெகோவாவுடைய சந்நிதியில் ஆராதனை செய்யவேண்டும். 4அதிபதி ஓய்வுநாளிலே யெகோவாவுக்குப் பலியிடும் தகனபலி, பழுதற்ற ஆறு ஆட்டுக்குட்டிகளும் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவுமே. 5ஆட்டுக்கடாவுடன் உணவுபலியாக ஒரு மரக்கால் மாவையும், ஆட்டுக்குட்டிகளுடன் உணவுபலியாகத் தன்னுடைய திராணிக்குத்தகுந்ததாகத் தருகிற ஈவையும், ஒவ்வொரு மரக்கால் மாவோடு ஒருபடி எண்ணெயையும் படைக்கவேண்டும். 6மாதப்பிறப்பான நாளிலோ, அவன் பழுதற்ற ஒரு இளங்காளையையும், பழுதற்ற ஆறு ஆட்டுக்குட்டிகளையும் ஒரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டு, 7உணவுபலியாக இளங்காளையுடன் ஒரு மரக்கால் மாவையும், ஆட்டுக்கடாவுடன் ஒரு மரக்கால் மாவையும், ஆட்டுக்குட்டிகளுடன் தன்னுடைய திராணிக்குத்தகுந்ததாக, ஒவ்வொரு மரக்கால் மாவுடன் ஒருபடி எண்ணெயையும் படைக்கவேண்டும். 8இளவரசன் வருகிறபோது வாசல் மண்டபத்தின் வழியாக நுழைந்து, அது வழியாகத் திரும்பப் புறப்படவேண்டும். 9தேசத்தின் மக்கள் குறிக்கப்பட்ட நாட்களில் யெகோவாவுடைய சந்நிதியில் வரும்போது, ஆராதனை செய்கிறதற்காக வடக்கு வாசல்வழியாக உள்ளே நுழைந்தவன் தெற்கு வாசல்வழியாகப் புறப்படவும், தெற்கு வாசல்வழியாக உள்ளே நுழைந்தவன் வடக்கு வாசல்வழியாகப் புறப்படவேண்டும்; தான் நுழைந்த வாசல்வழியாகத் திரும்பிப்போகாமல், தனக்கு எதிரான வழியாகப் புறப்பட்டுப்போவானாக. 10அவர்கள் உள்ளே நுழையும்போது, அதிபதி அவர்கள் நடுவிலே அவர்களுடன் உள்ளே நுழைந்து, அவர்கள் புறப்படும்போது அவனும் கூடப் புறப்படவேண்டும். 11பண்டிகைகளிலும் குறிக்கப்பட்ட காலங்களிலும் அவன் படைக்கும் உணவுபலியாவது: காளையுடன் ஒரு மரக்கால் மாவும், ஆட்டுக்கடாவுடன் ஒரு மரக்கால் மாவும், ஆட்டுக்குட்டிகளுடன் அவனுடைய திராணிக்குத்தகுந்ததாகத் தருகிற ஒரு ஈவும், ஒவ்வொரு மரக்கால் மாவுடன் ஒருபடி எண்ணெயும் கொடுக்கவேண்டும். 12இளவரசன் உற்சாகமான தகனபலியையோ, சமாதான பலிகளையோ யெகோவாவுக்கு உற்சாகமாகச் செலுத்த வரும் போது, அவனுக்குக் கிழக்கு நோக்கி இருக்கும் வாசல் திறக்கப்படவேண்டும்; அப்பொழுது அவன் ஓய்வு நாளில் செய்கிறதுபோல, தன்னுடைய தகனபலியையும் தன்னுடைய சமாதான பலியையும் செலுத்தி, பின்பு புறப்படவேண்டும்; அவன் புறப்பட்டபின்பு வாசல் பூட்டப்படவேண்டும். 13தினந்தோறும் ஒருவயதுடைய பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியைக் யெகோவாவுக்குத் தகனபலியாகப் படைக்கவேண்டும்; காலைதோறும் அதைப் படைக்கவேண்டும். 14அதினோடு காலைதோறும் உணவுபலியாக ஒரு மரக்கால் மாவிலே ஆறிலொரு பங்கையும், மெல்லிய மாவைப் பிசையும்படி ஒருபடி எண்ணெயிலே மூன்றிலொரு பங்கையும் படைக்கவேண்டும்; இது அன்றாடம் யெகோவாவுக்குப் படைக்கவேண்டிய நித்திய கட்டளையான உணவுபலி. 15இப்படிக் காலைதோறும் அனுதின தகனபலியாக ஆட்டுக்குட்டியையும் உணவுபலியையும் எண்ணெயையும் செலுத்தவேண்டும். 16யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இளவரசன் தன்னுடைய மகன்களில் ஒருவனுக்குத் தன்னுடைய சொத்தில் ஒரு பங்கைக் கொடுத்தால், அது அவனுடைய மகன்களுடையதாக இருக்கும்; அது உரிமைச் சொத்தாக அவர்களுக்குச் சொந்தமாகும். 17அவன் தன்னுடைய ஊழியக்காரர்களில் ஒருவனுக்குத் தன்னுடைய சொத்தில் ஒரு பங்கைக் கொடுத்திருந்தால், அது விடுதலையின் வருடம்வரை அவனுடையதாக இருந்து, பின்பு திரும்ப அதிபதியினிடம் சேரும்; அதின் சொத்து அவனுடைய மகன்களுக்கே உரியது, அது அவர்களுடையதாக இருக்கும். 18இளவரசனானவன் மக்களை பறிமுதல் செய்து, அவர்களின் சொந்தமானதற்கு அவர்களைப் வெளியாக்கி, அவர்களுடைய சொத்திலிருந்து ஒன்றும் எடுக்கக்கூடாது; என்னுடைய மக்களில் ஒருவரும் தங்களுடைய சொந்தமானதற்கு வெளியாக்கப்பட்டுச் சிதறடிக்கப்படாதபடி அவன் தன்னுடைய சொந்தத்திலே தன்னுடைய மகன்களுக்கு சொத்து கொடுக்கவேண்டும். 19பின்பு அவர் வாசலின் பக்கத்தில் இருந்த நடைவழியாக என்னை வடக்குக்கு எதிரான ஆசாரியர்களுடைய பரிசுத்த அறைவீடுகளுக்கு அழைத்துக்கொண்டுபோனார்; அந்த இடத்தில் மேற்கே இருபக்கத்திலும் ஒரு இடம் இருந்தது. 20அவர் என்னை நோக்கி: குற்றநிவாரணபலியையும், பாவநிவாரணபலியையும், உணவுபலியையும் ஆசாரியர்கள் வெளிமுற்றத்திலே கொண்டுபோய் மக்களைப் பரிசுத்தம்செய்யாதபடி, அவர்கள் அவைகளைச் சமைக்கிறதற்கும் சுடுகிறதற்குமான இடம் இதுவே என்றார். 21பின்பு அவர் என்னை வெளிமுற்றத்தில் அழைத்துக்கொண்டுபோய், என்னை முற்றத்தின் நான்கு மூலைகளையும் கடந்துபோகச்செய்தார்; முற்றத்து ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு முற்றம் இருந்தது. 22முற்றத்தின் நான்கு மூலைகளிலும் புகைத்துவாரங்களுள்ள இந்த முற்றங்கள் நாற்பது முழ நீளமும், முப்பது முழ அகலமுமானவைகள்; இந்த நான்கு மூலை முற்றங்களுக்கும் ஒரே அளவு இருந்தது. 23இந்த நான்கிற்கும் சுற்றிலும் உள்ளே ஒரு பக்கஅறை உண்டாயிருந்தது; இந்தப் பக்கஅறைகளின் சுற்றிலும் அடுப்புகள் போடப்பட்டிருந்தது. 24அவர் என்னை நோக்கி: இவைகள் மக்கள் செலுத்தும் பலிகளை ஆலயத்தின் பணிவிடைக்காரர்கள் சமைக்கிற வீடுகள் என்றார்.